
தமிழில் நான்கு புத்தகங்களை எழுதியிருக்கும் முதல் மற்றும் ஒரே கற்பனைப் பாத்திரம். கதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதும் முழுநேர எழுத்தாளர், பத்தியாளர், ஓவியர். 1967இல் பிறந்த இவர், ஒரு மனைவிக்கும் மகனுக்கும் சொந்தக்காரர். எழுத்துத் துறையில் இருபது ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறார்.
இவர் 2009இல் எழுதத் தொடங்கிய 'ஒரு லோட்டா இரத்தம்' என்ற நெடுங்கதையில் வரும் பேயோன் என்ற முக்கியப் பாத்திரத்திற்கு வடிவம் கொடுக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக ட்விட்டரில் செப்டம்பர் 11, 2009இல் 'ரைட்டர் பேயோன்' (@writerpayon) அறிமுகமானார். நெடுங்கதை இன்னும் எழுதி முடிக்கப்படவில்லை.
இவரது முதல் நூலான 'பேயோன் 1000' (2010), தமிழின் முதல் ட்விட்டர் நுண்பதிவுத் தொகுப்பு. இரண்டாவது நூலான 'திசை காட்டிப் பறவை' (2010) ஒரு நெடுங்கதை, சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை அடங்கியது. அடுத்து 2012 ஜனவரியில் வெளியான 'காதல் இரவு', 'பாம்புத் தைலம்' ஆகியவை முறையே உரைநடை, கவிதைத் தொகுப்புகள். நான்கு நூல்களையும் ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவை தவிர 'புனைவு' என்ற தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார்.
நவம்பர் 2011 முதல் 'ஓவியத்துவம்' என்ற வெப்காமிக்கை நடத்திவருகிறார்.