Piriyan - பிரியன்
எப்போதும் தொடர்கின்ற சாதனைப் பயணத்தில்
வெற்றிகளும் தோல்விகளும் நித்தம் நித்தம் யுத்தம் செய்து
பலமுறை வெற்றிகளும் சிலமுறை தோல்விகளும்
வெற்றித் தோல்விகளை மாறி மாறி சந்தித்துக்கொண்டிருக்கும்…
அந்த மழைக்கால வேளையில்
போதிமரக்கிளையில் நண்பர்களோடு சேர்ந்து
நினைவுகளை கொத்தித் தின்றபடி
கவலையறியா ஒரு ரகசியப் பறவையாய்
இசையோடு அமர்ந்திருக்கிறேன்
எனக்கேயான பாடல்களை எல்லோருக்குமாய் பாடியபடி…
பிரியன்… திரைப்பட பாடலாசிரியர் பிரியனாக உங்களோடு என்னைப்பற்றி பகிர்ந்துகொள்வது, காதலியின் மடியில் கிடப்பதுபோல சுகமானது…
அஞ்சாதே, காதலில் விழுந்தேன், ஆ..ஆ..இ..ஈ.., 4777, நினைத்தாலே இனிக்கும், உத்தமபுத்திரன், முரண், யுவன் யுவதி, வெயிலோடு விளையாடு போன்ற 90 -க்கும் மேற்பட்ட பாடல்களோடு நகர்ந்துகொண்டிருக்கிறது எனது காலநதி…
எனது எழுத்துக்கள்… முகம், பெயர் தெரியாத இதயங்களுக்கும் தருகின்ற சின்னச்சின்ன இன்பங்களுக்காக எழுதிக்கொண்டே இருப்பேன்… நிறைவுடன்…
மேலும் மேலும் உயரம் செல்வதற்கான உந்துதலும், உழைப்பும், தன்னம்பிக்கையும், படைப்புகள் மீதான காதலும், கடவுளும், நண்பர்களும் இருக்கும்வரை… எனது வளர்ச்சிகள் நிரந்தரமானது !
இன்னும் நிறைய தூரம் செல்லவேண்டி இருக்கிறது…
பிரியமுடன்…
பிரியன்…